

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகன் (39). காமநாயக்கன்பாளையத்தில் இவர் நடத்தி வந்த மதுபானக் கூடத்தில், கடந்த 16-ம் தேதி ரூ. 4,000 திருட்டுப் போனது தொடர்பாக, அங்குள்ளவர்களிடம் விசாரித்தார்.
அங்கு பணியாற்றி வந்த தேனி மாவட்டம் போடி சொக்கலிங்கம் நகரை சேர்ந்த முத்து (38) என்பவர் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். ஆத்திரமடைந்த முருகன், சக ஊழியர்களுடன் சேர்ந்து முத்துவை தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த முத்துவை, திண்டுக்கல்லுக்கு காரில் கொண்டு சென்றனர். முத்துவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் வைத்து முகத்தை சிதைத்துவிட்டு, முத்துவின் சடலத்தை அங்கேயே வீசிச்சென்றனர். 17-ம் தேதி காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அம்மையநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், மதுபானக்கூட உரிமையாளர் முருகன், ஊழியர்கள் கோபால், வீராசாமி, மருது செல்வம், கார்த்திக், கவன் ஆகியோர் தாக்கி கொலை செய்தது, தெரியவந்தது. இதையடுத்து பல்லடத்தில் பதுங்கி இருந்த 6 பேரையும் அம்மையநாயக்கனூர் போலீஸார் கைது செய்தனர்.