

திருப்பூர்/மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மின்வாரிய தற்காலிக ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிபட்டியை சேர்ந்தவர் நவரசன் (27). மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இவர், 2020 செப்.12-ல், தனது மனைவி அழைப்பதாக கூறி, 12 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும்,அலைபேசியில் படம் எடுத்தும், வெளியே கூறினால் கொலைசெய்துவிடுவதாகவும் மிரட்டிஉள்ளார்.
சிறுமியின் நடத்தையில் சந்தேகம் எழ, அவரிடம் பெற்றோர் விசாரித்ததில், நவரசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்ட பிரிவுகளின்கீழ் உடுமலை மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து நவரசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிசுகந்தி, நவரசனுக்கு போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் 20 ஆண்டுசிறைத்தண்டனை விதித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு தெரிவித்தார்.
இந்த வழக்கை சிறப்பாக விசாரணை செய்து, சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த உடுமலை மகளிர் போலீஸாரை கோவை மண்டல டிஐஜி முத்துசாமி மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோர் பாராட்டினர்.
மதுரை நீதிமன்றம்
இதேபோன்று, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுந்தரம்(45) என்ற அந்த நபரை, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராதிகா, நேற்று சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.