

சேலம்: சேலம் மத்திய சிறை வார்டன் தாக்கப்பட்டது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கண்காணிக்கும் குழுவில் வார்டன் கார்த்தி உள்ளார். கோவை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் அமர்நாத், பாபு ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பணியில் இருந்த வார்டன் கார்த்தியை தாக்கியுள்ளனர். வார்டன் கூச்சலிடவே, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
வார்டன் தாக்கப்பட்டது தொடர்பாக ஜெயிலர் ஜெயமோகன், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.