

சென்னை: வியாபாரியிடம் கஞ்சா கொடுத்து விற்பனை செய்ய வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 போலீஸாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கதொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அயனாவரம் காவல் நிலைய தனிப்படை போலீஸார் முகப்பேரை சேர்ந்த கஞ்சா வியாபாரி திலீப் குமாரை சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சக்திவேல் தன்னிடம் கஞ்சா கொடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து சக்திவேலிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹவுரா விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு வந்த ஒரு நபரிடம் 18 கிலோ கஞ்சா இருந்தது எனவும், அதை எடை போடுவதற்கு முன்பு, தான் அதில் ஒரு பகுதியை எடுத்துமறைத்து வைத்துக் கொண்டதாகவும், பின்னர் தனது அறை நண்பரான சென்னை சைபர் கிரைம் பிரிவில் காவலராக பணிபுரியும் செல்வகுமாருடன் சேர்ந்து திலீப்குமாரிடம் அதை கொடுத்து விற்கச்சொன்னதாகவும் சக்திவேல் கூறினார். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், காவலர் செல்வகுமாரை பணி இடைநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும், சக்திவேலை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே எஸ்.பி. இளங்கோவும் உத்தரவிட்டுள்ளனர். அவர்களது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.