

பொள்ளாச்சியில் மூதாட்டியை கொலை செய்து 21 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி (76). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகன் செந்தில்குமார் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் நாகலட்சுமி வசித்து வந்தார். நேற்று காலை அங்கு சென்ற மகள், தாய் நாகலட்சுமி வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் நடத்திய விசாரணையில், நாகலட்சுமி அணிந்து இருந்த வைர மூக்குத்தி உள்ளிட்ட 21 சவரன் நகை கொள்ளை போனதும் தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீஸார், அருகிலிருந்த மருத்துவமனையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சந்தேகத்துக்குரிய ஒரு நபர் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன், தடயங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு செய்தார். பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டார்.