

கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டில் இரு தினங்களுக்கு முன்னர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகி நேற்று முன்தினம் பாலக்காட்டில் கொலை செய்யப்பட்டார். பாலக்காட்டில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்களால், கோவை மாநகரில் 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸார் கூறும்போது, ‘‘பாலக்காட்டில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து கோவையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கொலை சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் கோவை, பொள்ளாச்சியில் பதுங்கியுள்ளனரா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம். மாநகரில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 பட்டாலியன் தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸார், 150 ஆயுதப்படை போலீஸார் உட்பட 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரில் உள்ள தங்கும் விடுதிகள், சந்தேகத்துக்குரிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கோவை-கேரள எல்லைகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.