

ஓசூரில் குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை தருவதாகக் கூறி மின்சாதன பொருட்கள் கடை உரிமையாளரை ஏமாற்றி பணம் பறித்தவர்களை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் அதே பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். மேலும், கட்டடங்கள் கட்டித்தரும் ஒப்பந்தப் பணிகளும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி, ஆறுமுகத்தின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டைகள் தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஆறுமுகம், அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு 4 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகள் தேவை எனக் கூறியுள்ளார்.
அதற்கு போனில் பேசிய மர்ம நபர்கள், உடனடியாக மின்னஞ்சலில் விலைப்பட்டியல் அனுப்பி வைப்பதாகவும், சிமெண்ட்டுக்கான முழு தொகையையும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து ஆறுமுகம் வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 840 பணத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறியபடி சிமெண்ட் மூட்டைகள் வரவில்லை.
இதுதொடர்பாக கேட்பதற்காக அவர்களது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.