

ஈரோடு: எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால், தற்கொலைக்கு முயன்றதாக ஈரோடு பெண் காவல் ஆய்வாளரின் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், பெண் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் கடந்த 14-ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, இவரை செல்போன் மற்றும் காவல்துறை மைக்கில் அழைத்த எஸ்பி, பெண் ஆய்வாளரின் பணியில் குறைபாடு தொடர்பாக கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தனது காவல்துறை மைக்கை, அருகில் இருந்த போலீஸாரிடம் கொடுத்துவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி விட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் ஆய்வாளர் சென்றுள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
ஈரோடு சோலார் பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டுக்குச் சென்ற காவல் ஆய்வாளர், அங்கு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தோர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறும்போது, காவல்நிலையத்தில் சரணடைந்த காதல் ஜோடி தொடர்பான வழக்கில், ஆய்வாளர் சரியாகக் கையாளாததால், எஸ்பி கண்டித்துள்ளார். இதன் காரணமாக அவர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், ‘எஸ்பி ஓபன் மைக்கில் அசிங்கமாக பேசி, திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பி சென்றது உண்மைதான். எனது இந்த முடிவுக்கு ஏடிஎஸ்பி மேடமும், தனிப்பிரிவு ஏட்டுவும்தான் காரணம். ஏடிஎஸ்பி மேடம் சமூதாயரீதியில் அரசியல் செய்கிறார். இவர்களின் செயலால் எஸ்பி, எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், என்னை ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்தும், ஜீப்பினை பறிமுதல் செய்யும் செயலிலும் ஈடுபட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்பி அலுவலகத்தில் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.