மதுரை, ராமநாதபுரத்தில் திருவிழாவில் நகை திருடிய 5 பெண்கள் கைது
மதுரை: மதுரை செல்லூர் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று முன்தினம் கீழமாசி வீதியில் நின்றிருந்தபோது, மூன்று பெண்கள் அவரது பர்சை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். அக்கம், பக்கத்தினர் விரட்டிப் பிடித்து, விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த விசா லட்சுமி(34), மண்டபம் இந்திராணி (30), முருகேசுவரி(30) என்பது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை சொக்கிகுளம் கோகலே சாலையைச் சேர்ந் தவர் சோமசுந்தரம். இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அப்போது அவரிடம் 2 மொபைல் போன்களை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பினார். பயணிகள் இளைஞரை விரட்டிப் பிடித்து திடீர்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் ஒத்தக்கடையைச் சேர்ந்த சதாம் உசேன்(22) என தெரிந்தது. இவரை கைது செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மீனாட்சி சொக்க நாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் குருக்கள் மனோகரனின் மனைவி சரஸ்வதி(68) என்பவர் இதில் பங்கேற்றார்.
அப்போது சரஸ்வதி மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை மாற்றியபோது அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை 2 பெண்கள் திருட முயன்றனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் பிடித்து பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாரிசெல்வம் மனைவி லெட்சுமி(40), பொன்னழகு மனைவி சாந்தா(36) எனத் தெரிய வந்தது. போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
