Published : 15 Apr 2022 02:39 PM
Last Updated : 15 Apr 2022 02:39 PM

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

வேலூர்: வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த வடமாநில பெண் மருத்துவர் மற்றும் அவரது ஆண் நண்பரான உடன் பணியாற்றும் மருத்துவர் ஆகியோர் கடந்த மாதம் 17ம் தேதி காட்பாடியில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் ஷேர் ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட மர்ம நபர்கள் 5 பேர் கத்திமுனையில் இருவரையும் பாலாற்றின் கரையோர பகுதிக்கு கடத்திச் சென்று செல்போன், தங்கச் சங்கிலியை பறித்ததுடன் அவர்களை மிரட்டி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறித்துள்ளனர்.

மேலும், பெண் மருத்துவரை மிரட்டி அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். இது தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு மின்னஞ்சல் மூலம் வரப்பெற்ற புகாரின்பேரில், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.

இதில், பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து காவலை நீட்டிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x