Published : 14 Apr 2022 06:09 AM
Last Updated : 14 Apr 2022 06:09 AM
குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், இரு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி, குடியாத்தம் நகர காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குடியாத்தம் அடுத்த லட்சுமணாபுரம் பகுதியில் நகர காவல் துறையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை காவல் துறையினர் மடக்கினர். அதில், அவர்கள் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் அம்பேத்கர்(30), குடியாத்தம் கஸ்பா அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விக்னேஷ் (25), தனகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்ரம் (22) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT