ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனம்: வழக்கறிஞருக்கு 2 வாரம் சிறை தண்டனை

ஆன்லைன் விசாரணையின்போது இளம்பெண்ணுடன் ஒழுங்கீனம்: வழக்கறிஞருக்கு 2 வாரம் சிறை தண்டனை
Updated on
1 min read

சென்னை: கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை காணொலி வாயிலாக நடந்தது. அப்போது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் காணொலியில் நடந்த விசாரணையின்போது இளம்பெண் ஒருவருடன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்தனர். அந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, அந்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதேபோல வீடியோ காட்சியில் தோன்றும் பெண்ணுக்கு ரூ.4 லட்சத்தை இழப்பீடாக வழங்க அந்த வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது அநாகரிகமான செயலில் ஈடுபட்ட வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணனுக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே அவர் 34 நாட்கள் சிறையில் இருந்ததால் அதை தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் நீக்கிய சிபிசிஐடி போலீஸாருக்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in