

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நள்ளிவிரல் கார் மீது லாரி மோதியதில் கர்ப்பிணி பெண் போலீஸ் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). இவர், முசிறி காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி சுகந்தி(27). இவர் காட்டுப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணிபுரிந்து வந்தார்.
சுகந்தி ஒன்பது மாத கர்ப்பமாக உள்ளார். பிரசவத்துக்காக தனது தாய் வீடு உள்ள திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டிக்கு கணவருடன் திருச்சியில் இருந்து காரில் சென்றார். காரை கணவர் சதீஷ்குமார் ஓட்டினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலை ஏபி நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் சுகந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சதீஷ்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திண்டுக்கல் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.