ஆன்லைனில் முதலீடு செய்ய வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி 12 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி: கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது

ஆன்லைனில் முதலீடு செய்ய வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி 12 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி: கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி: ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த 12 பேரிடம் ரூ.37 லட்சம் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த திலீபன்ராஜ் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா. இவர் தனது வாட்ஸ்அப்எண்ணுக்கு வந்த லிங்க் மூலம்செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்துள்ளார். சில நாட்கள் ஆனதும், தனது பணம் திரும்ப வராமல் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்து ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் போலி முதலீட்டு நிறுவனம் குறித்து அவர் புகார் அளித்தார். சைபர்குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், கேரள மாநிலம் பாலக்காடு கரியம்பழா பகுதியைச் சேர்ந்த முகம்மது குஞ்சிசாலி மகன் முகம்மது சாகிப் உசைன் (25) மற்றும் பாலக்காடு போம்பரா பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய 2 பேரும் ஐஸ்வர்யாவிடம் ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 186 மோசடி செய்தது தெரியவந்தது.

இவர்கள் தூத்துக்குடியில் மட்டும் 12 பேரிடம் சுமார் ரூ.37 லட்சம் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முகம்மது சாகிப் உசைன், ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in