

சேலம்: மதுரையில் இருந்து சேலத்துக்கு காரில் 100 கிலோ கஞ்சாவை கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் போதைப்பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்எஸ்ஐ சரவணன், ஏட்டு ரோஜாரமணன், போலீஸார் குமார், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம் சீலநாயக்கன்பட்டி-கொண்டலாம்பட்டி இடையே நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து, மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.