

ஈரோடு: மடிக்கணினிக்கு பதிலாக மரக்கட்டையை வைத்து, ஆன்லைன் நிறுவனத்தை ஏமாற்றி மோசடி செய்தது தொடர்பாக, கணவன் - மனைவி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). சேலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (32). ஆன்லைனில் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து மடிக்கணினி, கைக்கடிகாரம் என ரூ.44 ஆயிரத்து 900 மதிப்புள்ள பொருட்களை, பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் முறையில் கார்த்திக் ஆர்டர் செய்துள்ளார். இதன்படி அந்த நிறுவன ஊழியர் நவீன் கடந்த வாரம் இந்த பொருட்களை அவர்களது வீட்டில் டெலிவரி செய்துள்ளார். கார்த்திக் - ராதிகாதம்பதி, பொருட்களை வீட்டிற்கு உள்ளே எடுத்துச் சென்றுவிட்டு, பணம் தராமல் ஊழியரைக் காக்க வைத்துள்ளனர். அதன்பின்னர், ஒரு பொருளுக்கான தொகையாக ரூ.564 மட்டும் செலுத்தி விட்டு, மற்ற இரு பொருட்களை திருப்பி அனுப்புவதாகக் கூறி, அவரிடம் இரு பார்சல்களை ஒப்படைத்துள்ளனர்.
நிறுவனத்திற்கு வந்த நவீன், அதிகாரிகளிடம் நடந்ததைக் கூறி பொருட்களை திரும்ப ஒப்படைத்துள்ளார். சந்தேகமடைந்த அவர்கள், பார்சலை திறந்து பார்த்த போது, மடிக்கணினிக்கு பதிலாக மரக்கட்டையையும், விலை உயர்ந்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மலிவான கடிகாரத்தையும் மாற்றி வைத்து, பார்சல் செய்து, திருப்பி அனுப்பியது தெரியவந்தது.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீஸில் ஆன்லைன் நிறுவனத்தினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கார்த்திக் - ராதிகா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, கார்த்திக் - ராதிகா தம்பதி இதற்கு முன்பு கோவை, மதுரை, சென்னை போன்ற இடங்களில் இது போன்று மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குகளும் பதிவாகி உள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக, தற்போது ராதிகாவை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான கார்த்திக்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.