காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த சாராய வியாபாரி வாணியம்பாடி மகேஸ்வரி கைது

மகேஸ்வரி.
மகேஸ்வரி.
Updated on
2 min read

திருப்பத்தூர்: காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல சாராய வியாபாரி வாணியம்பாடி மகேஸ்வரி உட்பட 7 பேரை தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் சாராயம் பாக்கெட்டுகளில் நிரப்பப்பட்டு வாணியம்பாடி மட்டுமின்றி நாட்றாம்பள்ளி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதி வரை விரிவுப்படுத்தி வந்தனர். சாராய விற்பனையில் வாணியம்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கொடி கட்டி பறந்து வந்தார். அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 80-க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 8 முறை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதாகி மகேஸ்வரி சிறைக்கு சென்றாலும், அவரது ஆதரவாளர்கள் சாராய வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

மகேஸ்வரி மட்டுமின்றி அவரது கணவர் சீனிவாசன், உறவினர்கள், குடும்பத்தார் என அனைவரும் சாராய தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

வாணியம்பாடி காவல் துறையி னரும் இவரது வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் நேதாஜி நகரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாராய வியாபாரிகள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த சாராய கும்பலைச் சேர்ந்த சிலர், நேதாஜி நகருக்கு சென்று அங்கு காவல் துறையினருக்கு துப்பு கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனை தடுக்க வந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடந்தது.

இதைக்கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், வாணியம்பாடி காவல் துறையினர் சாராய வியாபாரிகள் 10 பேரை கைது செய்தனர். ஆனால், சாராய வியாபாரத்தை காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் நடத்தி வரும் மகேஸ்வரியை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி உட்கோட்ட காவல் அலுவல கத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில், தலைமறைவாக உள்ள சாராய வியாபாரி மகேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகளை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். மேலும், சாராய வியாபாரிகளை கைது செய்ய வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் நாகராஜன் (வாணியம்பாடி நகரம்), பழனிமுத்து (வாணியம்பாடி கிராமியம்), உதவி காவல் ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை காவல் துறையினர் 5 குழுக்களாக பிரிந்து வாணியம்பாடி நேதாஜி நகர், இந்திரா நகர், நியூடவுன், லாலா ஏரி, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று சாராய வேட்டை நடத்தினர். அதில், சாராய தொழிலில் ஈடுபட்டு வந்த சிலரை கைது செய்தனர்.

மேலும், சாராய வியாபாரி மகேஸ்வரி குறித்து விசாரணை நடத்தியபோது அவர் தி.மலை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலைக்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் அங்கு பதுங்கியிருந்த மகேஸ்வரி (43), அவரது கணவர் சீனிவாசன் (48), மகேஸ்வரி கூட்டாளிகளான உஷா (36), நளினி (30), சின்னராசு (26), தேவேந்திரன் (22), மோகன் 22) ஆகிய 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in