Published : 10 Apr 2022 04:00 AM
Last Updated : 10 Apr 2022 04:00 AM

வேலைதேடி வந்த முதல்நாளே உ.பி.யை சேர்ந்த இளைஞர் அடித்துக் கொலை: பல்லடம் அருகே 4 பேர் கைது

திருப்பூர்

திருப்பூருக்கு வந்த முதல்நாளன்றே உத்தரபிரதேச மாநில இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவரது தம்பி பிரேஜ்லால் (18). இருவரும் வேலை தேடி ரயில் மூலம் கடந்த 7-ம் தேதி திருப்பூருக்கு வந்தனர்.

பல்லடத்தில் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி அலுவலகத்தில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த 4 பேர், பனியன் நிறுவனத்தில் மறுநாளே நீங்கள் இருவரும் வேலைக்கு சேர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ரயிலில் வந்ததால் களைப்பாக இருப்பதாகவும், 2 நாட்கள் கழித்து வேலையில் சேர்வதாகவும் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இதில், மயக்கமடைந்த சகோதரர்களை நள்ளிரவில் ஒரு வாகனத்தில் ஏற்றி சின்னக்காளிபாளையம் செல்லும் வனப்பகுதியில் தள்ளிவிட்டுச்சென்றனர். அதிகாலையில் மயக்கம் தெளிந்து பார்த்த பிரேஜ்லால், அண்ணன் ராஜ்குமார் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன், மங்கலம் காவல் நிலையத்தில் பிரேஜ்லால் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த நிர்மல் (35), கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜய்பாலாஜி (34), கேரளாவை சேர்ந்த ராஜேஷ், கிருஷ்ணகிரியை சேர்ந்த முகமது சுபீர் (34) ஆகிய 4 பேரை மங்கலம் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x