

கோவை: கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் ஏடிஎம் கார்டுகள் மூலம் ரூ.8.67 லட்சம் தொகையை திருடிய ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் கே.டி.எஸ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி யசோதா(52). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் யசோதா இரண்டு ஏடிஎம் கார்டுகளை வைத்திருந்ததார். அவர் உயிரிழந்த பின்னர் ஏடிஎம் கார்டுகளை காணவில்லை. மனைவி இறந்த சோகத்தில் கிருஷ்ணசாமி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணசாமி வங்கிக்குச் சென்று கணக்கு விவரங்களை சரிபார்த்தபோது, யசோதாவின் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்து 67 ஆயிரம் தொகை எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஒரு வங்கியின் ஏடிஎம் அட்டை மூலம் ரூ.4.82 லட்சமும், மற்றொரு வங்கி ஏடிஎம் அட்டை மூலம் ரூ.3.85 லட்சம் தொகையும் எடுக்கப்பட்டிருந்தது. ஏடிஎம் கார்டின் பின்பக்கத்தில் ரகசிய குறியீட்டு எண் எழுதியிருந்தது அப்போது தான் கிருஷ்ணசாமிக்கு நினைவுக்கு வந்தது.
இதுகுறித்து, கிருஷ்ணசாமி பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், அதே மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அதுல் ஜோகெய்(55), ராஜ் பங்கிங்(31) ஆகியோர், ஏடிஎம் கார்டுகளை திருடி பணத்தை எடுத்து செலவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.