

ஜோலார்பேட்டை: சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (30). இவரது மனைவி ரஞ்சலி(25). இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் ரயில் மூலம் சென்னை சென்று மீண்டும், பெங்களூருவுக்கு ரயிலில் பயணிப்பது ரஞ்சிலியின் வழக்கம். அதன்படி, சென்னை செல்வதற்காக பெங்களூருவில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி விரைவு ரயிலில் ரஞ்சலி பயணித்தார். அந்த ரயில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப் பட்டது. ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரிதக்கா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் ரயில் வந்த போது சிக்னல் கிடைக்காமல் அங்கே சிறிது நேரம் நின்றது.
ரயில் பெட்டியின் ஜன்னல் ஓரமாக ரஞ்சலி அமர்ந்திருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கையை விட்டு ரஞ்சலி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதைக்கண்ட ரஞ்சலி கத்தி கூச்சலிட்டார். சக பயணிகள் கண்விழித்து வந்து விசாரிப் பதற்குள் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. பிறகு, இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ரஞ்சலி புகார் அளித்தார். அதன்பேரில் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது யாரென விசாரிக்கின்றனர்.