Published : 08 Apr 2022 07:12 AM
Last Updated : 08 Apr 2022 07:12 AM

தூத்துக்குடியில் காரில் கடத்தப்பட்ட 2 இளைஞர்களை சினிமா பாணியில் 30 கி.மீ. விரட்டிச் சென்று மீட்ட போலீஸார்: நெல்லையைச் சேர்ந்த 5 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் அருகே மடத்தூர் - சோரீஸ்புரம் சாலையில், நேற்று முன்தினம் மாலை 6 மணிஅளவில் நின்றுகொண்டிருந்த2 இளைஞர்களை, காரில் வந்த 5 பேர் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.

தூத்துக்குடி - பாளையங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சுமோ காரை, பொட்டலூரணி விலக்கு பகுதியில் ரோந்து பணியிலிருந்த, தூத்துக்குடி ஊரக நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், தலைமைக் காவலர் அருள் ஜோசப் ஆகியோர் நிறுத்த முயன்றனர். கார் நிற்காமல் சென்றதால், அதனை துரத்திச் சென்றனர்.

வடக்கு காரசேரி அருகே ரோந்து பணியில் இருந்த முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் அந்தக் காரை மடக்கிப்பிடிக்க முயன்றார். உடனே, அந்தக்கார் எதிர் திசையில் திரும்பி மீண்டும் தூத்துக்குடியை நோக்கி சென்றது.

எஸ்.ஐ. சுரேஷ்குமார் அளித்த தகவலின்பேரில், தெய்வச்செயல்புரம் பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த காவலர்கள் கந்தசாமி, கணேஷ் ஆகியோர் அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால், அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு, வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் வழியாகச் சென்று, மீண்டும் வடக்கு காரசேரியை நோக்கி அந்த கார் சென்றுள்ளது.

தொடர்ந்து, 2 வாகனங்களில் விரட்டி வந்த போலீஸார், வடக்கு காரசேரி பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பிக்கள் சம்பத், வெங்கடேசன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் இசக்கிராஜா (32), ரவிச்சந்திரன் மகன் முத்து செல்வகுமார் (28), செல்வின் மகன் லிவிங்ஸ்டன்(28), விளாத்திகுளம் முத்தையாபுரம் முருகேசன் மகன் சரவணன் (28) மற்றும் திருநெல்வேலி குலவணிகர்புரம் ஜான்சங்கர் மகன் இம்மானுவேல் (27) என தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் இசக்கி சூர்யா (18), இஸ்ரவேல் மகன் வேதநாயகம் (18) ஆகிய இருவரையும் காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர் கடத்தப்பட்ட 2 இளைஞர் மீட்கப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் வாகனத்தை சினிமா பாணியில் 30 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிய போலீஸாருக்கு, வெகுமதி வழங்கி எஸ்பி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x