Published : 08 Apr 2022 07:19 AM
Last Updated : 08 Apr 2022 07:19 AM

தொழிலாளி இறப்பு குறித்து நடந்த பேச்சுவார்த்தையின்போது மோதல்; இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீஸார் காயம்: வட மாநில தொழிலாளர்கள் 40 பேர் கைது

ஈரோடு அருகே தனியார் சமையல் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் உருட்டுக்கட்டை களுடன் வடமாநிலத் தொழிலாளர்கள் இருப்பது அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.

ஈரோடு: ஈரோடு அருகே தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீடு கோரி வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஏற்பட்ட மோதலில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீஸார் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த நன்செய் ஊத்துக்குளியில் செயல்படும் தனியார் சமையல் எண்ணெய் ஆலையில், ஒப்பந்த அடிப்படையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 6-ம் தேதி இரவு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த காமோத்ராம் (30) என்ற தொழிலாளி, சரக்குகளை ஏற்றிக் கொண்டு இருக்கும்போது, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலை நிர்வாகத்தினர் முயற்சித்தனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறந்தவருக்கு இழப்பீடு வழங்கிய பின்பே, உடலை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவர் உடலை எடுக்க அனுமதிக்குமாறும், அதன் பின்னர் இழப்பீடு குறித்து பேசி முடிவு செய்யலாம் எனவும் போலீஸார் கூறியதை வடமாநில தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அவர்களைக் கலைக்க போலீஸார் முயற்சித்தபோது, 2 தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தொழிலாளர்கள் தாக்கியதில் காயமடைந்த மொடக்குறிச்சி காவல் நிலைய
உதவி ஆய்வாளர் பழனிசாமி.

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதில், மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா, எஸ்.ஐ. பழனிசாமி, காவலர்கள் பிரகாஷ், கார்த்தி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். இரு காவல்துறை வாகனங்கள் மற்றும் தொழிற்சாலையின் முன்புற அலுவலகம் ஆகியவை சேதமடைந்தன. இதனைதொடர்ந்து அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் காமோத்ராம் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி போலீஸார், அவர்களைக் கைது செய்தனர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸாரை, கோவை சரக டிஐஜி முத்துசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலையிலும் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x