மாணவியை வீட்டுக்கு வருமாறு அலைபேசியில் அழைப்புவிடுத்த அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் கைது

மகேந்திரன்
மகேந்திரன்
Updated on
1 min read

பொன்னேரி: நட்பை வளர்க்க மாணவிக்கு அலைபேசி அழைப்பு விடுத்தது தொடர்பாக பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் 4,745 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன்(59). இவர், சமீபத்தில் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவரை, அவரது மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஆடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து, தகவலறிந்த பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், நேற்று கல்லூரிக்கு விரைந்து, விசாரணையில் ஈடுபட்டனர். அவ்விசாரணையில், உதவி பேராசிரியர் மகேந்திரன், மாணவியிடம் மொபைல் போனில் உரையாடி, அவரை வீட்டுக்கு அழைத்தது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல், மொபைல் போன் உரையாடல் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு, உதவி பேராசிரியர் மகேந்திரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

ஆகவே, உதவி பேராசிரியர் மகேந்திரனை, போலீஸார் தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது கல்லூரி மாணவர்கள், உதவி பேராசிரியரை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். ஆகவே, மாணவர்களை அப்புறப்படுத்தி உதவி பேராசிரியர் மகேந்திரனை காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், உதவி பேராசிரியர் மகேந்திரனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in