

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், கல்லல் இந்திரா நகரைச் சேர்ந்த தாமஸ் மனைவி சோபியா (45). இவர் நேற்று காலை ஐசிஐசிஐ வங்கி வீதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சோபியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
அதே நபர்கள் பிற்பகல் 2.30 மணிக்கு தேவகோட்டை மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற கார்ப்பரேஷன் வீதியைச் சேர்ந்த உடையப்பன் மனைவி ராசாத்தி (43) அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
அதன் பின்பு சிறிது நேரத்தில் தேவகோட்டை ரெகுநாதபுரம் கிழக்குத் தெருவில் தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த சுப்பையா மனைவி ஜெயந்தி (40) அணிந்திருந்த 16 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர். அவர்களுடன் ஜெயந்தி போராடி பாதி செயினை மீட்டுவிட்டார். மீதமுள்ள 8 பவுன் அறுந்த செயினுடன் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த 3 பெண்களிடமும் நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை கண்டறிய அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கல்லல், தேவகோட்டை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.