Published : 07 Apr 2022 08:02 AM
Last Updated : 07 Apr 2022 08:02 AM

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி ரஞ்சித்குமார் மீது குண்டர் சட்ட நடவடிக்கை: கைதான மனைவியை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி ரஞ்சித்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இவரதுமனைவியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, ஒதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் என்ற ஓவிஆர் (35). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு பகுதி நிர்வாகியாக இருந்த இவர், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

சென்னை கிண்டி, சின்னமலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ரஞ்சித்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் நட்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவரது மனைவிக்கு தெரிந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றார். இதற்கு காரணம் கார் ஓட்டுநர் ரஞ்சித் என நினைத்து, அவரை கொலை செய்ய ரஞ்சித் குமார் முயன்றார்.

இது தொடர்பான வழக்கில், அந்தமானில் தலைமறைவாக இருந்த ரஞ்சித்குமாரை, தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். ரஞ்சித்குமார் கைது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “ரஞ்சித்குமார் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவர் மீதுஉள்ள குற்ற வழக்குகள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சிறையில் உள்ள இவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்’ என்றனர்.

மனைவியிடமும் விசாரிக்க முடிவு: இதேபோல் போலியான நிதி நிறுவனங்கள் தொடங்கி, அந்த நிறுவனங்களில் பண முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி சவுதி அரேபியாவில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர் சீனிவாசன் என்பவரிடம் ரூ.12.50 கோடி மற்றும் 36 பவுன் நகைகளைப் பெற்று மோசடி செய்ததாக ரஞ்சித் குமாரின் மனைவி சுனிதாவை (34) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதேபோல், பல தொழில் அதிபர்களிடம் பண மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ள போலீஸார் சுனிதாவையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தனி ஆளாக இதேபோல் மோசடி செய்திருக்க வாய்ப்புஇல்லை. எனவே, இவர்களின் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாக சந்தேகிக்கும் போலீஸார் முழு உண்மையையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x