Published : 06 Apr 2022 08:16 AM
Last Updated : 06 Apr 2022 08:16 AM
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் அருகே கடலில் மிதந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 160 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகளை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரையைச் சேர்ந்தவர் மீனவர்சோமசுந்தரம். இவர் தனக்கு சொந்தமான படகில், சக மீனவர்களுடன் நேற்று அதிகாலை 7 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது படகு அருகே 5 மூட்டைகள் தண்ணீரில் மிதந்து வந்தன. அவர் இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுறுத்தலின்பேரில், அந்த மூட்டைகளை மீனவர் சோமசுந்தரம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி பரத் சீனிவாசன், அதிராம்பட்டினம் கடலோர காவல்படை ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் அந்த மூட்டைகளை கைப்பற்றி, அதிராம்பட்டினம் கடலோரக் காவல்படை அலுவலகத்துக்குக் கொண்டுவந்து சோதனை நடத்தினர்.
இதில், 5 மூட்டைகளில் சிறு சிறு பொட்டலங்களாக கட்டப்பட்ட 160 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கஞ்சா மூட்டைகளை கடலுக்குள் போட்டுச் சென்றது யார்? இவை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா? இதில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT