Published : 06 Apr 2022 07:25 AM
Last Updated : 06 Apr 2022 07:25 AM
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் ஓதியூரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (35). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியான இவர், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை கிண்டி சின்னமலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த ரஞ்சித்குமாருக்கு, மற்றொரு பெண்ணுடன் கூடாநட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவரது மனைவிக்குத் தெரிந்ததால், அவர் ரஞ்சித்குமாரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த விவகாரம் மனைவிக்குத் தெரிய, தனது கார் ஓட்டுநர் தியாகராய நகர் ரஞ்சித் காரணம் எனக் கருதிய ரஞ்சித்குமார், கடந்த 31-ம் தேதி இரவு அவரைத் தாக்கியுள்ளார்.
அவருக்குப் பயந்த ரஞ்சித் 8-வது மாடியில் உள்ள குளியலறையில் இருந்து ஜன்னல் வழியாக கயிறு மூலம் இறங்கியுள்ளார். 3-வது மாடி வரை இறங்கிய ரஞ்சித், அதற்கு கீழ் இறங்க முடியாமல், கீழே குதித்துள்ளார். இதில்அவரது கால் உடைந்ததால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான ரஞ்சித்குமாரைக் கைது செய்ய அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்விசாரணையில், அவர் அந்தமானில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தமான் சென்ற தனிப்படை போலீஸார், ரஞ்சித்குமாரை கைது செய்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டிரான்சிட் வாரண்ட் பெற்று, சென்னைக்கு நேற்று அழைத்து வந்தனர். பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கட்டப்பஞ்சாயத்து மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரஞ்சித்குமாருக்கு எதிரிகள் அதிகரித்துள்ளனர். இதனால், உயிருக்குப் பயந்த அவர்,எப்போதும் தனது ஆதரவாளர்களுடன் இருந்துள்ளார். சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருந்த அவரை, சில கானா பாடகர்கள் புகழ்ந்துபாடி, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றி, சன்மானம் பெற்றுள்ளனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT