

வேலூர்: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா பார்சலை கண்டறிந்த காவல் துறையினர் மோப்ப நாய் சிம்பா உதவியுடன் பேருந்தில் பதுங்கி இருந்த கஞ்சா கடத்தல் நபரையும் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டத்தின் வழியாக கஞ்சா கடத்தலை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில எல்லையொட்டி உள்ள சேர்க்காடு, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சைனகுண்டா, பத்தலப்பல்லி சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடி வழியாக அதிகளவில் கஞ்சா கடத்தல் நடைபெறுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் மோப்ப நாய் சிம்பா உதவியுடன் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு, கை மேல் பலனாக தொடர்ந்து கஞ்சா பார்சல் சிக்கி வருகிறது.
இந்நிலையில், காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான காவலர்கள் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் மோப்ப நாய் சிம்பா உதவியுடன் சோதனையிட்டனர்.
அதில், இருக்கைக்கு அடியில் இருந்த ஒரு பையில் கஞ்சா இருப்பதை மோப்ப நாய் சிம்பா கண்டறிந்தது. அதை பிரித்துப் பார்த்ததில் சுமார் 10 கிலோ அளவுக்கு கஞ்சா இருந்தது. அந்த பைக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க மீண்டும் மோப்ப நாய் சிம்பாவை காவலர்கள் பயன்படுத்தினர்.
அதில், கஞ்சா பையை நன்றாக மோப்பம் பிடித்த சிம்பா, பேருந்தில் கஞ்சா பை இருந்த இருக்கைக்கு சற்று தள்ளி பதுங்கியிருந்த நபரை கவ்விப் பிடித்தது. அவரை பிடித்து விசாரித்தபோது கஞ்சா பார்சல் பை தன்னுடையது என்பதை ஒப்புக்கொண்டார். விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம் மட்டப்பாறையைச் சேர்ந்த யுவராஜ் (21) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரித்ததில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் வாங்கிய கஞ்சா பார்சலை திருப்பதியில் இருந்து வேலூர் வழியாக விழுப்புரத்துக்கு கடத்த முயன்றதை ஒப்புக்கொண்டார்.
மேலும், 50 கிலோ, 100 கிலோ என மொத்தமாக கஞ்சா கடத்தினால் காவல் துறையினரிடம் சிக்கிக்கொள்வதால் அதை மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்து கடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அடுத்து வாகன தணிக்கையை தீவிரமாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா பார்சலுடன் குற்றவாளியை கைது செய்த காவல் துறை குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.