

சென்னை: சென்னை பாரிமுனை நாராயணப்பா சாலையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (59). திமுக பிரமுகரான இவர், பாரிமுனை பேருந்து நிலையத்தில் கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், பாரிமுனை பேருந்து நிலையத்தில் கடந்த வாரம் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு சுவரையொட்டி இந்த தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
அந்த சுவரில் அதிமுக சார்பில்விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாகவும், அதை சவுந்தரராஜன் அழித்து விட்டு, தண்ணீர் பந்தல் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் சவுந்தரராஜன் தண்ணீர் பந்தலுக்குத் தேவையான தண்ணீர் கேன்களை கடையில் இருந்து கொண்டு வந்துள்ளார்.
பின்னர், கடையிலிருந்து சிறிதுதூரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த4 பேர் கும்பல் அரிவாள், கத்திபோன்ற ஆயுதங்களால் தாக்கியது. இதை எதிர்பாராத சவுந்தரராஜன் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட முயன்றார். இருப்பினும்,அந்தக் கும்பல் சுற்றி வளைத்து, சவுந்தரராஜனை வெட்டிக் கொலைசெய்துவிட்டு, தப்பியோடியது.
தகவலறிந்து வந்த எஸ்பிளனேடு போலீஸார் சவுந்தரராஜன் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன், சமீபத்தில்தான் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார். பரபரப்பாக காணப் படும் பாரிமுனை பேருந்து நிலையத்தில், திமுக பிரமுகர் கொல்லப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.