

சென்னை: ஓடும் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை குண்டூசியால் காயப்படுத்தியதுடன், அதை வீடியோவாகவும் வெளியிட்டார். இதையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவர், கடந்த 1-ம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூருக்கு அரசுப் பேருந்தில் தனது தாயாருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் கையை முன்னால் நீட்டி, ஆங்காங்கே தொட்டுள்ளார். முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அந்தப் பெண், பின் சுதாரித்துக் கொண்டார். இதையடுத்து, தான் வைத்திருந்த குண்டூசியை எடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரின் கைவிரலில் குத்தியுள்ளார். இதை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.
பின்னர், பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறினார். இதையடுத்து, அரசுப் பேருந்து வானகரம் அருகே நிறுத்தப்பட்டது. உடனடியாக இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், பிடிபட்டவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராகவன்(40) என்பது தெரியவந்தது. அவரைப் போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில், அந்த இளம் பெண், தான் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகப் பரவி வருகிறது.