

கோத்தகிரி: கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதியில் இருந்த கஞ்சா செடிகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, போலீஸார் தீவிர சோதனை பணி மேற்கொண்டு, கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, நீலகிரி மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 12 கஞ்சா வழக்குகள் பதிவு செய்துள்ளதோடு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோத்தகிரி அருகே கூக்கல் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தொழிலாளர் குடியிருப்புக்கு அருகே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக வேருடன் கஞ்சா செடிகளை அகற்றிய போலீஸார், அந்த குடியிருப்பில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.