

சேலம்: சேலத்தில் இரு இடங்களில் 38 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.
சேலம் வழியாக கேரளா சென்ற தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயிலில், ரயில்வே போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பயணி ஒருவர் வைத்திருந்த பெரிய பைகளை சோதனையிட்டனர். அதில், 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, கஞ்சாவை கடத்தி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் பகன் (40) என்பவரை கைது செய்தனர்.
அரியானூரில் 20 கிலோ கஞ்சா
சேலத்தை அடுத்த அரியானூர் அருகே நேற்று முன்தினம் தனிப்படை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்றவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக ஈரோடு எலவம்மலை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரை (45) போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.