

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 1.036 கிலோ எடையுள்ள கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்து, கேரளாவைச் சேர்ந்த ஒருவரை ராமநாதபுரம் நகர் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் நகர் காவல்நிலைய போலீஸாருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் பசும்பொன்நகர் ரயில்வே கேட் அருகே ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா, ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த இருவரை சோதனையிட்டபோது, ஒருவர் டூவீலிருந்து தப்பிடியோடிவிட்டார்.
மற்றொருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு பாலீத்தீன் பைகளில் இருந்த 1.036 கிலோ கிராம் எடையுள்ள போதைப்பொருளான கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாய் ஆயிலின் மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் கைது செய்யப்பட்ட கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நெடுமண்காடைச் சேர்ந்த சரபுதீன் மகன் சபீக்(28) என்பவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் தப்பிச்சென்றவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி முத்தரையர் நகரைச் சேர்ந்த ஜஹாங்கீர் சுல்தான் மகன் முகம்மது ஜாவீத் ரஹ்மான்(36) என்பதும், அவர் தான் கஞ்சா ஆயிலை கடத்தி வரச்சொன்னதாகவும், அதை ராமநாதபுரத்தில் உள்ள ஒருவரிடம் கொடுக்க வந்தபோது போலீஸில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
போலீஸார் கூறும்போது, "கஞ்சா எண்ணெய்யை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்துள்ளனர். தப்பிச்சென்ற முகம்மது ஜாவீத் ரஹ்மான் தொடர்ந்து இலங்கைக்கு கஞ்சா, கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவரை பிடித்தால் முழு உண்மை தெரிய வரும். கேரளாவைச் சேர்ந்த சபீக் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக ஏர்வாடியில் வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் ஏர்வாடியைச் சேர்ந்த முகம்மது ஜாவீத் ரஹ்மானுடன் சேர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளார்" எனத் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா கூறும்போது, "இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தோம். இது விலையுயர்ந்த போதைப்பொருள்களில் ஒன்று. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதன்முறையாக கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.