

தமிழகம் முழுவதும் 5 நாட்களில், போதைப் பொருட்கள் விற்றதாக 3,187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட காவல்துறை, கோவை, திருப்பூர் மாநகர காவல்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு தலைமை வகித்தார். கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, கோவை சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது: ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற திட்டத்தின்படி, கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். போதைகளுக்கு அடிமையான மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். காவல் ஆய்வாளர்கள், பொதுமக்களை ‘வாட்ஸ்அப்’ குழு மூலம் ஒன்றிணைத்து தகவல்களை சேகரிக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவலர்களின் குறைகளை அவ்வப்போது உயர் அதிகாரிகள் கேட்டறிந்து, அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாராந்திர ஓய்வு வழங்க வேண்டும். காவலர்கள் பழிவாங்கும் போக்குடன் பொதுமக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது. மக்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி சான்றிதழ் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறும்போது, ‘‘கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 3,187 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1.77 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும், 102 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க ‘1930’ என்ற கட்டணமில்லாத எண்ணை பொதுமக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும்,’’ என்றார்.
இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் வி.பத்ரி நாராயணன் (கோவை), ஆஷிஸ் ராவத் (நீலகிரி), வி.சசிமோகன் (ஈரோடு), சஷாங் சாய் (திருப்பூர்), காவல் துணை ஆணையர்கள் இ.எஸ்.உமா, டி.ஜெயச்சந்திரன், அபினவ் குமார், எஸ்.ஆர்.செந்தில்குமார், எஸ்.செல்வராஜ், பி.ரவி, முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.