

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மோப்ப நாய் சிம்பா உதவியுடன் பேருந்தில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காட்பாடி எல்லையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச்சாவடியில் காட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் நேற்று காலை வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மோப்ப நாய் சிம்பா உதவியுடன் ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் சோதனையிட்டனர்.
அதில், கஞ்சா கடத்தி வந்த ஒருவரை பிடித்தனர். விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா (50) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்தனர்.