

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே நாளில் 15 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே வானவரெட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வருபவர் துளசிராமன்.
இவர் உதவி தலைமை ஆசிரியர் ஆவார்.இந்த நிலையில் துளசிராமன் கடந்த 3 மாதங்களாக பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான இன்னல்களை சந்தித்து வந்த சிறுமிகள், இது குறித்து பெற்றோர்களிடம் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரே நாளில் 15 சிறுமிகளிடம் ஆசிரியர் துளசிராமன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஒன்றுகூடி ஆசிரியர் துளசி ராமன் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் வானவரெட்டி அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் துளசிராமனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.