வடமதுரை அருகே கணவர், மாமியார் வெட்டிக்கொலை: பெண் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல்: வடமதுரை அருகே தோட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவர், மாமியாரை வெட்டிக்கொன்ற மனைவி உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே குருக்களையன்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (40). குடும்பத்துடன் கிராமத்தில் வசித்து வந்தார். இவரது தாயார் சவுந்தரம்மாள் (60) ஊருக்கு வெளியே உள்ள தோட்ட வீட்டில் வசித்தார்.
நேற்று முன்தினம் தோட்டத்துக்குச் சென்ற செல்வராஜ் பணிகளை முடித்துவிட்டு இரவு தாயாருடன் தோட்ட வீட்டில் தங்கினார்.நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக பால்காரர் தோட்டத்துக்குச் சென்றார். அப்போது தாய், மகன் இருவரும் முகத்தில் பலத்த காயங்களுடன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த திண்டுக்கல் டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார்மீனா, எஸ்.பி., சீனிவாசன், டி.எஸ்.பி., மகேஷ் ஆகியோர் தோட்டத்துக்குச் சென்று கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு தனிப்படை அமைத்தனர். தனிப்படை விசாரணை நடத்தியதில் கொலையுண்ட செல்வராஜின் மனைவி சுபஹாஷிணி, தனக்கு தம்பி முறை உறவு கொண்ட கோபிகிருஷ்ணாவுடன் பழகியதாக கூறப்படுகிறது. இதற்கு இடையூறாக கணவர் இருந்ததாலும், அவரது சொத்துக்கு ஆசைப்பட்டும் கணவர், மாமியாரை இருவரும் கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து சுபஹாஷிணி(35), கோபிகிருஷ்ணா(29) ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.கொலைக்கு உதவியதாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
