Published : 31 Mar 2022 04:48 PM
Last Updated : 31 Mar 2022 04:48 PM

ஓசூர் வனப்பகுதியில் வேட்டையாட முயற்சி: கர்நாடகாவைச் சேர்ந்த நபர் நாட்டுத் துப்பாக்கியுடன் கைது

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஜவளகிரி வனச்சரகத்தில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை, நாட்டுத் துப்பாக்கியுடன் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் யானை, கரடி, புள்ளிமான், சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட பல அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

யுகாதி பண்டிகையை முன்னிட்டு வனப்பகுதியில் நடத்தப்படும் பண்டிகை கால வேட்டையை தடுப்பதற்காக சிறப்புக் குழு அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை பிடிக்க மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஜவளகிரி வனச்சரகத்தில் வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனவர் செல்வராஜ், வனக்காப்பாளர் சீனிவாசன், வனக்காவலர் குமார், வேட்டைத்தடுப்பு காவலர் சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு குழுவினர் தளி காப்புக்காடு கரியன்குட்டை பகுதியில் 31ம் தேதி இன்று அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டனர். அச்சமயத்தில் கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டம், கனகபுரா வட்டம், தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த புட்டமாதய்யா (44) என்பவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்த போது, அவரை வனக்குழுவினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வனச்சரகர் சுகுமார் கூறியது: "கைது செய்யப்பட்ட புட்டமாதய்யா மீது ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில் வனவிலங்கு குற்ற வழக்கு பதிவு செய்து, தேன்கனிக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நீதிமன்ற காவல் பெற்று ஓசூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜவளகிரி வனச்சரகத்தில் வனவிலங்கு வேட்டையை தடுப்பதற்காக இரவு நேர ரோந்து பணியில் சிறப்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x