Last Updated : 30 Mar, 2022 06:31 PM

 

Published : 30 Mar 2022 06:31 PM
Last Updated : 30 Mar 2022 06:31 PM

புதுச்சேரி | ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருவர் கல்லால் அடித்துக் கொலை: ஒருவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பு அருகே ஓட்டல் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்தக் கடையின் முன்பு இன்று அதிகாலை படுத்திருந்த 60 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபரின் தலையில் மர்ம நபர் ஒருவர் கல்லால் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பியதுடன் முதியவர் தலை நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விசாரணையில் இறந்த முதியவர் குப்பையில் கிடக்கும் பேப்பர் உள்ளிட்டவற்றை சேகரித்து, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு சாப்பிட்டு, சாலையோரங்களில் படுத்து உறங்கி வந்தது தெரியவந்தது. ஆனால், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

இதற்கிடையே அதே நபர் முள்ளோடை அருகே கடலூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரையும் கல்லால் அடித்துல் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் காயமடைந்த பாதிக்கப்பட்டவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸார் முள்ளோடை சாராயக்கடை அருகே சட்டையில் ரத்தக் கரையுடன் இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் கடலூரை சேர்ந்த மணிகண்டன்(49) என்பதும், முதியவரை கல்லால் அடித்து கொன்றதும், ராமலிங்கத்தை கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்பது தெரியவந்தது. மேலும், கேரளா மாநிலம் திருச்சூரில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்ததும், தற்போது மனநலம் பாதித்த நிலையில் சுற்றி வருவதும் தெரிந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த கிருமாம்பாக்கம் போலீஸார், மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்:

கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் ஒருவர் இன்று காலை ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்த நபர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த நாயகனைபிரியாள் பகுதியை சேர்ந்த முருகன் (44) என்பதும், இவர் கடந்த சில ஆண்டுகளாக கிருமாம்பாக்கம் பகுதியில் தங்கி கட்டிடத்தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதயைடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்னர். மேலும், சக பணியாளர்களிடம் விசாரணை நடத்தியதில், நரம்பை சாராயக்கடைக்கு சென்ற முருகன் நரம்பை சுடுகாட்டு பாதையில் இளைஞர்கர்கள் சிலருடன் ஒன்றாக சாராயம் குடித்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் முருகனை குச்சியாலும், கல்லாலும் இளைஞர்கள் அடித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x