Published : 30 Mar 2022 12:01 PM
Last Updated : 30 Mar 2022 12:01 PM
வேலூர்: கே.வி.குப்பம் பகுதியில் குடும்ப தகராறில் கணவர் தாக்கியதில் மயங்கி விழுந்த மனைவி உயிரிழந் தார். அவரை உடலை ரகசியமாக மயானத்தில் அடக்கம் செய்த 3 பேரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள வடுகன் தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம் (25). தனியார் காலணி தொழிற் சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுப்ரஜா (24) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மாற்று சமூகத்தினர் என்பதால் கே.வி.குப்பம் அருகேயுள்ள முடினாம்பட்டு அரசமர தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுப்ரஜாவுக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டதால் விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் கூடாநட்பு ஏற்பட்டுள்ளது. இதை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெரிந்து கொண்ட சுப்ரஜா கேள்வி எழுப்பியதால் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விநாயகம் சுப்ரஜாவை தாக்கியதில் மயங்கி விழுந்தார். அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. நாடித் துடிப்பும் இல்லாததால் உயிரிழந்து விட் டதாக விநாயகம் கருதியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த விநாயகம் தனது சகோதரர் விஜய் (21) மற்றும் உறவினர் சிவா (23) ஆகியோரின் உதவியை நாடியுள்ளார்.
மூவரும் சேர்ந்து சுப்ரஜாவின் உடலை கவசம்பட்டு சுரைக்காய் தோப்பு பகுதியில் உள்ள மயானத்தில் ரகசியமாக புதைத்து விட்டனர். சுப்ரஜா மாயமாகிவிட்ட தாக அக்கம், பக்கம் இருப்பவர் களிடம் விநாயகம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், விநாயகத்தின் நடவடிக்கையில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சுப்ரஜாவின் குடும்பத்தினர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி தலைமையிலான காவலர்கள் விநாயகத்தை நேற்று முன்தினம் அழைத்து விசாரித்தபோது, மனைவியை புதைத்துவிட்ட விவரத்தை தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் விஜய் மற்றும் சிவா ஆகியோரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுப்ரஜாவை புதைத்த இடத்தையும் மூவரும் நேற்று காலை அடையாளம் காட்டினர். இதையடுத்து, குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, கே.வி.குப்பம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி முன்னிலையில் நேற்று மாலை உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
மருத்துவர்கள் இல்லாததால் தோண்டி எடுக்கப்பட்ட உடலை பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் கே.வி.குப்பம் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT