வேலூர் | எஸ்.பி., தனிப்படை காவலரின் மணல் கடத்தல் சர்ச்சை ஆடியோ - விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்

வேலூர் | எஸ்.பி., தனிப்படை காவலரின் மணல் கடத்தல் சர்ச்சை ஆடியோ - விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்
Updated on
2 min read

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் தனிப்படை காவலரின் மணல் கடத்தல் தொடர்பான செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் தனிப்படை காவலர்களின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக புகாருக்கு உள்ளாகி வருகிறது. தனிப்படையில் செயல்படும் சிலர் கஞ்சா, மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், குட்கா விற்பனை என சட்ட விரோத நடவடிக்கையில் நேரடி தொடர்பில் இருந்து வருவதாக வேலூர் காவல் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருக்கும் தனிப்படை தலைமை காவலர் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது எஸ்.பி., தனிப்படை காவலர் ஒருவர் மணல் கடத்தல் தொடர்பாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உரையாடல் குறித்த விவரம்

வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் உயர் முக்கிய பொறுப்பில் இருக்கும் காவலர் ஒருவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டுக்கு மணல் தேவை என்பதால் எஸ்.பி., தனிப்படையில் பணியாற்றி வரும் முக்கிய உதவி ஆய்வாளர் ஒருவர், அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். இதற்காக, கொலை வழக்கில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவர் மூலம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதியில் மணல் ஏற்றிச் செல்ல ஏற்பாடும் நடந்துள்ளது.

அப்போது, மணல் கடத்தல் வாகனத்தை பாகாயம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பறிமுதல் செய்து பஞ்சர் மணி, வாகன உரிமையாளர் டெல்லிபாபு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். அந்த வாகனத்தை விடுவிக்க பேரம் பேசியும் முடியாத நிலையில், பஞ்சர் மணி எஸ்.பி., தனிப்படை காவலர் ஒருவரிடம் தொடர்ந்து பேசி வாகனத்தை விடுவிக்க வற்புறுத்தி யுள்ளார்.

அந்த உரையாடலில், பஞ்சர் மணி, ‘எஸ்ஐ சொல்லித்தான் மணலை ஓட்டினேன். அவர் சொன்னபடி வண்டியுடன் வந்திருந்தால் வண்டி சிக்கியிருக்காது. எப்படியாவது அந்த வண்டியை மீட்டுக் கொடுங்கள். என் மீது வழக்கு போட்டதை பற்றி நான் கவலைப்படவில்லை. வண்டியை மீட்க முடியாத நிலையில் உள்ளது. என்னுடைய நம்பரை பார்த்து எஸ்ஐ எடுத்து பேசுவதில்லை’’ என கூறுகிறார்.

இதையடுத்து பஞ்சர் மணியை சமாதானம் செய்யும் அந்த எஸ்.பி., தனிப்படை காவலர், ‘எங்கள் தரப்பில் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. பார்த்து அட்ஜெஸ்ட் செய்துகொள்’ என கூறுகிறார். மற்றொரு ஆடியோவில் வீடு கட்டிவரும் காவலர், பஞ்சர் மணியிடம் பேசும்போது, ‘‘நாளைக்கு 10 ஆயிரம் கொடுக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்ய முடியும்’’ என்கிறார்.

இந்த ஆடியோ உரையாடல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘‘டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in