

புதுக்கோட்டை: பணம் தர மறுத்த தாயை எரித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவரை 40 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மனைவி லீலாவதி(56). இவரது மகன் சந்தோஷ்குமார்(26). தான் அடகு வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மீட்பதற்காக தாய் லீலாவதியிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தோஷ்குமார் பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு லீலாவதி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீட்டில் இருந்த மண்ணெண்ெணயை தாய் மீது ஊற்றி சந்தோஷ்குமார் தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, தனது தாய் மீது எதிர்பாராதவிதமாக தீ பிடித்துவிட்டதாகக் கூறியதுடன், அவரை காப்பாற்றுவது போல சந்தோஷ்குமார் நடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த லீலாவதி, புதுக்கோட்டை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சையின்போது, தனதுமகனே தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி, தீ வைத்துகொளுத்தியதாக போலீஸாரிடம் லீலாவதி வாக்குமூலம் அளித்துஉள்ளார். இதன் அடிப்படையில் அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.அப்துல் காதர் நேற்று தீர்ப்பளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
மேலும், 40 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் இருக்க வேண்டும். தண்டனையை குறைக்கவோ, முன்னதாக விடுவிக்கவோ கூடாது. தான் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக சந்தோஷ்குமாரை 3 மாதம் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும்.
இந்தத் தண்டனையை, 18 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து சந்தோஷ்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பா.வெங்கடேசன் வாதாடினார். சம்பவம் நடந்து 7 மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் இருக்க வேண்டும். தண்டனையை குறைக்கவோ, முன்னதாக விடுவிக்கவோ கூடாது. தான் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக சந்தோஷ் குமாரை 3 மாதம் தனிமை சிறையில் அடைக்க வேண்டும்.