

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், வெங்கல்அருகே உள்ள பண்டிகாவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர், திருநின்றவூர் அருகே மேலகொண்டையார் பகுதியில் உள்ள தன் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில்தன் தந்தையின் பெயருக்கு பதிலாக தன் பெயரை போடவிரும்பினார். ஆகவே, பட்டாபெயர் மாற்றம் செய்வதற்காகசமீபத்தில் வருவாய்த் துறையினரிடம் விண்ணப்பித்துள்ளார்.
அவ்விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கைக்கு அனுப்புவதற்காக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, மேலகொண்டையார் கிராம நிர்வாக அலுவலர் சர்வேஸ்வரி, வாசுதேவனிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வாசுதேவன், கிராம நிர்வாக அலுவலர் சர்வேஸ்வரி மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, சர்வேஸ்வரியை கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, நேற்று மாலை மேலகொண்டையார் அருகே காவனூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், கிராமநிர்வாக அலுவலர் சர்வேஸ்வரியிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.5 ஆயிரம் பணத்தை லஞ்சமாக வாசுதேவன் அளித்தார்.
அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் திருவள்ளூர் டிஎஸ்பி., கலைச்செல்வம் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், லஞ்சம் வாங்கியசர்வேஸ்வரியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.