

வண்டலூர்: தாழம்பூர் காவல் எல்லையில் 10 இடங்களில் டாஸ்மாக் மதுபான கடை பாரில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடக்கிறது.
டாஸ்மாக் கடைகளில், விற்பனை நேரம் மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை என அரசு அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் மட்டுமே மதுபான விற்பனை அனுமதிக்கப்பட்டு உள்ள சூழலில் தாழம்பூர் காவல் எல்லையில் உள்ள 10 மதுபானக் கடைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்பது போன்று, 24 மணி நேரமும் மதுபான விற்பனை களைக்கட்டுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும் அருகில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. மேலக்கோட்டையூர் அரசுப் பள்ளி அருகே வேங்கடமங்கலம் - பொன்மார் சாலையில் 2 மதுபானக் கடைகள் உள்ளன். இதன் அருகே உள்ள மதுபானக் கடை, பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை தடையின்றி நடக்கிறது.
காலை, 6:00 மணிக்கு சர்வ சாதாரணமாக பார் உள்ளே செல்லும், குடிமகன்களுக்கு, மதுபானங்கள் தடையின்றி கிடைக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய போலீஸாரும் கண்டுகொள்ளாமல் உள்ளதால், தடையின்றி மது விற்பனை நடக்கிறது. மேலக்கோடையூர் அரசுப் பள்ளி அருகே 2 மதுபான கடைகளை மாற்ற வேண்டும் என செங்கை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: டாஸ்மாக் கடையில், மதுபான விற்பனை இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி போலீஸாரின் ஆதரவை பெற்றவர்கள் விடிய, விடிய மது விற்பனை செய்து வருகின்றனர். அனுமதியில்லாமல் செயல்படும் பார்களில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
போலீஸ், மதுவிலக்கு பிரிவு, டாஸ்மாக் அலுவலகம் இருந்தும் எந்த துறை அதிகாரிகளும் மறைமுக விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. மாதத்துக்கு ஒரு வழக்கு என, கணக்கு காட்டி போலீஸார் கடமையாற்றுகின்றனர்.
அரசு உத்தரவிட்டாலும் அதை செயல்படுத்தாமல் உள்ள அதிகாரிகள் மாறும்வரை இந்த நிலை மாறாது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். தாம்பரம் ஆணையர் ரவி இதற்கு நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.