

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சீதளி வடகரையைச் சேர்ந்தவர் யாசின் முகமது (44). அண்ணா சிலை அருகே இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு அக்னி பஜாரில் உள்ள சாலையோரக் கடையில் சாப்பிட்டார். மதுபோதையில் அங்கு வந்த ரியாஸ்கான் (22) அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டார். இதை யாசின் முகமது தட்டிக் கேட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரியாஸ்கான், யாசின் முகமதுவை கத்தியால் குத்தினார். காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ரியாஸ்கானை போலீஸார் விரட்டிப் பிடிக்க முயன்றனர். அப்போது, ‘அருகில் வந்தால் உயிர் இருக்காது,’ என கத்தியைக் காட்டி போலீஸாரை மிரட்டிவிட்டு தப்பினார். தொடர்ந்து தேடி வந்த போலீஸார் அவரை நேற்று அதிகாலை கைது செய்தனர்.
இதேபோல் சில மாதங்களுக்கு முன், திருப்பத்தூர் தங்கமணி தியேட்டர் பகுதியில் ரியாஸ்கான் மதுபோதையில் பட்டப்பகலில் கத்தியுடன் வியாபாரிகள், பொதுமக்களிடம் பிரச்சினை செய்தார்.
அப்போதும் பிடிக்கச் சென்ற போலீஸாரை மிரட்டிவிட்டு தப்பினார். அதன் பிறகு அவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் ரகளையில் ஈடுபட்டதோடு, வியாபாரியை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.