Published : 26 Mar 2022 09:04 AM
Last Updated : 26 Mar 2022 09:04 AM
சென்னை: சென்னையில் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 5 பேர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில், அந்தசிறுமிக்கு அதே பகுதியைச் சார்ந்த 5 இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சிறுமி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "எனது தந்தை லாரி ஓட்டுநர். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். மேலும், அவர் அம்மாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால், அம்மா குடும்பத்தை விட்டுப் பிரிந்துவிட்டார். இதன் பிறகு, நான் எனது 15 வயது அண்ணனுடன் வசித்து வருகிறேன்.
அண்ணன் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து, என்னை படிக்க வைத்து வருகிறார்.
எனது அண்ணனுக்கு நண்பர் ஒருவர் உள்ளார். கடந்த ஜனவரி 17-ம் தேதி அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வீட்டை காலி செய்துவிட்டு, குடும்பத்துடன் வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு, அந்த இளைஞர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து, எனது அண்ணனிடம் ‘உனது நண்பர்எந்த ஊரில் உள்ளார்?' என கேட்டு தகராறு செய்து வந்தனர்.
மேலும், அக்கும்பல் என்னையும், அண்ணனையும் கொலை செய்துவிடுவோம் என்றும் போதையில் வந்து மிரட்டினர். அதுமட்டுமின்றி, அக்கும்பல் அண்ணனை சரமாரியாகத் தாக்கினர்.
இதனால் பயந்துபோன அண்ணன், கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு நான் தனிமையில் வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், எனது தந்தைகுடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு வராததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் அக்கும்பல் வீட்டுக்கு வந்தது.
உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். நான்வெளியே ஓடி வந்தேன். இருப்பினும் என்னை விடாமல் துரத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதேபோல, அவர்கள் அடிக்கடி இரவில் வீட்டுக்கு வந்து, தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். எனவே, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அந்த சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் விசாரணை நடத்தியது. இதில், அச்சிறுமிக்கு அக்கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT