

திருச்சி: திருச்சி அருகே மாணவரை திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவரை கடந்த 5-ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து துறையூர் போலீஸார் விசாரித்தனர். இதில், அந்தப் பள்ளியில் பணியாற்றிய சிக்கத்தம்பூரைச் சேர்ந்த 26 வயது ஆசிரியை அதே நாளில் காணாமல் போனதும், மாணவரும் அவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியையின் செல்போனை போலீஸார் கண்காணித்தபோது, இருவரும் திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் இருப்பது தெரியவந்தது. போலீஸார், நேற்று முன்தினம் இருவரையும் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு கோயிலில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, 17 வயது மாணவரை கடத்தி திருமணம் செய்ததாக ஆசிரியை போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். மாணவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.