Published : 25 Mar 2022 06:23 AM
Last Updated : 25 Mar 2022 06:23 AM

பொள்ளாச்சி | நில பத்திரத்தை திருப்பித் தர மறுத்ததால் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழப்பு

பொள்ளாச்சி: நிலத்தின் பத்திரத்தை திருப்பித் தர மறுத்ததால் விவசாயி மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (59). அதே பகுதியில் 18 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலத்தை விற்பனை செய்வதற்காக அவரதுநண்பரை அணுகி விலை பேசியதாகவும், நிலத்தை விற்பனை செய்வதற்கு அசல் நில பத்திரங்களை நண்பர் பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாகியும் இடத்தை கிரையம் செய்யாமல் காலம்தாழ்த்தி வந்ததால், நேற்று முன்தினம் கனகராஜ், மனைவி சுமதி(45), மகன் கிருத்திக் ஆகியோர் நண்பர் வீட்டுக்கு சென்று பத்திரத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். அவர் பத்திரத்தை திருப்பித் தர மறுத்ததால், கனகராஜும், சுமதியும் தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளனர்.

மயக்கம் அடைந்த இருவரையும் அவரது மகன் கிருத்திக் ஆம்புலன்ஸ் மூலம் கோலார்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு சுமதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கனகராஜ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, கிருத்திக் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிலப்பத்திரத்தைபெற்றவர் மீது நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த சுமதியின் உடலை வாங்கமறுத்து நேற்று அவரது உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி தமிழ்மணி , போராட்டத்தில்ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைஎடுப்பதாக கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x