Published : 22 Mar 2022 09:22 AM
Last Updated : 22 Mar 2022 09:22 AM

கோவையில் நிலம் விற்பதாக ரூ.97 லட்சம் மோசடி: நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது

சுனில் கோபி

கோவை: கோவையில் நிலம் விற்பதாக கூறி, ரூ.97 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், மலையாள திரைப்பட நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் சமீபத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கோபி என்பவர் 2021 நவம்பரில் எனக்கு அறிமுகம் ஆனார். கோவை மாவுத்தம்பதி பகுதியில்4.25 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும், அதை வாங்குமாறும் என்னிடம் கூறினார். இதைநம்பி, சுனில் கோபி, அவரது உறவினர் ரீனா, கணவர் சிவதாஸ் ஆகியோரது வங்கிக் கணக்குகளுக்கு, பல்வேறு தவணைகளில் ரூ.97 லட்சம் தொகையை அனுப்பினேன். இந்நிலையில், நிலத்தின் வில்லங்கச் சான்றை மீண்டும் ஒருமுறை சரிபார்த்தபோது, அதில் நிலம் தொடர்பாக முன்னரே, ஒரு சிவில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நிலத்தை வாங்க நான் அளித்த பணத்தை திருப்பித் தருமாறு, சுனில் கோபியிடம் கேட்டேன். அவர் தரவில்லை. கடந்த மாதம் நேரில் அவரை சந்தித்து எனது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்தார். என்னிடம் மோசடி செய்து, மிரட்டல் விடுத்த சுனில்கோபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல், சதி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சுனில் கோபி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இவ்வழக்கு குறித்து விசாரித்த தனிப்படை போலீஸார்,கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பதுங்கியிருந்த சுனில் கோபியை கைது செய்தனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘சுனில் கோபி, ராஜ்யசபா எம்.பியும், திரைப்பட நடிகருமான சுரேஷ்கோபியின் இளைய சகோதரர். நில புரோக்கரான இவர் நவக்கரையில் தங்கி, பலருக்கும் பாத்தியப்பட்ட அங்கு உள்ள நிலத்தை தனது பெயரில் மோசடியாக பத்திரப்பதிவு செய்து இருந்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர்.

விசாரணையில் அந்த நிலத்தின் பத்திரப் பதிவை 2016-ல் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை யாருக்கும் தெரிவிக்காமல், அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நேற்று முன்தினம் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x