

கோவை: கோவையில் நிலம் விற்பதாக கூறி, ரூ.97 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், கேரளா மாநில திரைப்பட நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் சமீபத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில்கோபி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு அறிமுகம் ஆனார். கோவை மதுக்கரை அருகேயுள்ள, மாவுத்தம்பதி பகுதியில் 4.25 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும், என்னை வாங்குமாறும் அவர் என்னிடம் கூறினார். இதை நம்பி, சுனில் கோபி, அவரது உறவினர் ரீனா, அவரது கணவர் சிவதாஸ் ஆகியோரது வங்கிக் கணக்குகளுக்கு, பல்வேறு தவணைகளில் ரூ.97 லட்சம் தொகையை அனுப்பினேன். இந்நிலையில், நிலத்தின் வில்லங்கச் சான்றை மீண்டும் ஒருமுறை சரிபார்த்த போது, அதில் நிலம் தொடர்பாக முன்னரே, ஒரு சிவில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நிலத்தை வாங்க நான் அளித்த பணத்தை திருப்பித் தருமாறு, சுனில் கோபியிடம் கேட்ட போது, அவர் தருவதாக கூறினார். ஆனால் கூறியபடி தரவில்லை. கடந்த மாதம் நேரில் அவர சந்தித்து எனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்தார். என்னிடம் மோசடி செய்து, மிரட்டல் விடுத்த சுனில்கோபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
3 பேர் மீது வழக்குப்பதிவு
அந்தப் புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல், சதி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சுனில் கோபி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்தனர். பின்னர், இவ்வழக்கு குறித்து விசாரித்த தனிப்படை போலீஸார், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் பதுங்கியிருந்த சுனில்கோபியை கைது செய்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கூறும்போது,‘‘ விசாரணையில், கைது செய்யப்பட்ட சுனில் கோபி, தான் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாஜகவின் ராஜ்யசபா எம்.பியும், திரைப்பட நடிகருமான சுரேஷ்கோபியின் இளைய சகோதரர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், நில புரோக்கரான இவர் நவக்கரையில் தங்கி, பலருக்கும் பாத்தியப்பட்ட அங்குள்ள நிலத்தை தனது பெயரில் மோசடியாக பத்திரப்பதிவு செய்து இருந்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நிலத்தின் பத்திரப்பதிவை கடந்த 2016-ம் ஆண்டு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை யாருக்கும் தெரிவிக்காமல், அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் நேற்று (20-ம் தேதி) கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகிறோம்’’ என்றனர்.